search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "பந்தய குதிரை"

    வேகப்பந்து வீச்சாளர்களை பந்தய குதிரைகளை போல் பாதுகாக்க வேண்டும் என்று இந்திய பந்து வீச்சு பயிற்சியாளர் பரத் அருண் கூறியுள்ளார். #India #Australia #IndianCoach #BharatArun
    பெர்த்:

    ஆஸ்திரேலியாவுக்கு எதிராக அடிலெய்டில் நடந்த முதலாவது டெஸ்ட் கிரிக்கெட்டில் வெற்றி பெற்ற இந்திய அணி தொடரில் 1-0 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது. இவ்விரு அணிகள் இடையிலான 2-வது டெஸ்ட் போட்டி உலகின் அதிவேக ஆடுகளமான பெர்த்தில் நாளை (வெள்ளிக்கிழமை) தொடங்குகிறது. இந்திய நேரப்படி காலை 7.50 மணிக்கு இந்த டெஸ்ட் தொடங்கும். இதையொட்டி பெரும்பாலான இந்திய வீரர்கள் நேற்று பயிற்சியில் ஈடுபட்டனர்.



    பயிற்சி ஆட்டத்தின் போது இடது கணுக்காலில் காயமடைந்த பிரித்வி ஷா, முதலாவது டெஸ்டின் போது முதுகில் காயமடைந்த ரோகித் சர்மா ஆகியோர் தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகிறார்கள். ஒரு வேளை ரோகித் சர்மா உடல்தகுதிபெற முடியாமல் போனால், ஹனுமா விஹாரிக்கு வாய்ப்பு கிடைக்கும்.

    முதலாவது டெஸ்டில் ஆஸ்திரேலியாவின் 20 விக்கெட்டுகளில் 14-ஐ இந்திய வேகப்பந்து வீச்சாளர்கள் கைப்பற்றி அசத்தினர். பெர்த்திலும் ஆதிக்கம் செலுத்த வாய்ப்புள்ளது. இது தொடர்பாக இந்திய அணியின் பந்து வீச்சு பயிற்சியாளர் பரத் அருண் நேற்று நிருபர்களிடம் கூறியதாவது:-

    அடிலெய்டு போட்டியில் மட்டுமல்ல, அதற்கு முன்பாக நடந்த தென்ஆப்பிரிக்கா, இங்கிலாந்து மண்ணிலும் நமது வேகப்பந்து வீச்சாளர்கள் சிறப்பாக செயல்பட்டனர். இந்திய கிரிக்கெட் வரலாற்றில் சிறந்த வேகப்பந்து வீச்சு கூட்டணியில் (இஷாந்த் ஷர்மா, பும்ரா, முகமது ஷமி, புவனேஷ்வர்குமார், உமேஷ் யாதவ்) இதுவும் ஒன்றாகும். வேகப்பந்து வீச்சாளர்கள் தங்கள் பணியை நன்றாக செய்து வருவது மகிழ்ச்சி அளிக்கிறது. ஓரிருவர் மட்டுமல்ல, எல்லா பவுலர்களும் அசத்துகிறார்கள்.

    வேகப்பந்து வீச்சாளர்கள் அணியில் மிகவும் மதிப்பு மிக்கவர்கள். அதனால் அவர்களை கவனமாக கையாள வேண்டும். அதாவது பந்தய குதிரையை பராமரிப்பது போல் இவர்களையும் எந்தவித காயத்துக்கும், பணிச்சுமைக்கும் இடம் கொடுக்காமல் பார்த்துக் கொள்ள வேண்டும். கடந்த தொடர்களில், தொடர்ந்து சீராக பந்து வீசுவதில் குறைபாடு இருந்தது. அதை சரி செய்வதற்கு உண்மையிலேயே கடினமாக உழைத்திருக்கிறோம். ஒவ்வொருவரும் தங்களது திட்டம் என்ன, அதை எப்படி செயல்படுத்த வேண்டும் என்பதை வகுத்து அதற்கு ஏற்ப வலை பயிற்சி மேற்கொள்கிறார்கள்.

    பெர்த் போன்ற ஆடுகளத்தில் பவுலர்கள் உற்சாகமாக பந்து வீசுவார்கள். இந்த ஆடுகளத்தை உன்னிப்பாக பார்க்கவில்லை. ஆனாலும் எத்தகைய ஆடுகளத்தன்மை, சீதோஷ்ண நிலை காணப்பட்டாலும் அதற்கு ஏற்ப எங்களை தயார்படுத்திக் கொள்வோம்.

    வயது அதிகரிக்க, அதிகரிக்க சுழற்பந்து வீச்சாளர்கள் நன்கு பக்குவப்படுகிறார்கள். நாள்பட்ட ஒயினின் சுவை அதிகரிப்பது போன்று சுழற்பந்து வீச்சாளர்களும் மெருகேறுகிறார்கள். அடிலெய்டு டெஸ்டில் அஸ்வின் உண்மையிலேயே அபாரமாக பந்து வீசினார். கிட்டத்தட்ட 90 ஓவர்கள் பந்து வீசி 147 ரன்கள் விட்டுக்கொடுத்து 6 விக்கெட்டுகளை கைப்பற்றி எதிரணியை கட்டுப்படுத்தியதில் முக்கிய பங்கு வகித்தார். இதற்கு மேல் அவரிடம் இருந்து எதுவும் எதிர்பார்க்க முடியாது. அஸ்வின் மிகவும் நம்பிக்கைக்குரிய ஒரு பவுலர். களத்தில் என்ன செய்ய வேண்டும் என்பது அவருக்கு தெரியும். அது தான் நமக்கு அனுகூலமாகும்.

    இவ்வாறு பரத் அருண் கூறினார்.

    அடிலெய்டில் இருந்து பெர்த்துக்கு விமானத்தில் பயணித்த போது, விராட் கோலியும், அவரது மனைவி அனுஷ்கா சர்மாவும் தங்களது சொகுசு இருக்கையை, இந்திய வேகப்பந்து வீச்சாளர்களுக்கு சவுகரியமாக இருக்கும் வகையில் விட்டுக்கொடுத்தனர். கோலியின் செயல் தன்னை வெகுவாக கவர்ந்தது என்று அதை நேரில் பார்த்த இங்கிலாந்து முன்னாள் கேப்டன் மைக்கேல் வாகன் டுவிட்டரில் குறிப்பிட்டுள்ளார். #India #Australia #IndianCoach #BharatArun 
    ×